பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடக்கம்: அமைச்சர் பொன்முடி

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். 17-ம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பத்தை பதிவுசெய்துள்ளனர்.

அவர்களில் 90,471 பேர் பதிவுக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 50,686 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜுன் 4-ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்நிலையில், பொறியியல் கல்லூரி கலந்தாய்வு வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 2-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மாதம் முன்னதாகவே நடைபெற உள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.