பொன்முடி வீட்டில் தடய அறிவியல் அதிகாரிகள் சோதனை ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்று ஆய்வு

அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான சென்னை சைதாப்பேட்டை வீட்டில் தடய அறிவியல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை சுமார் 7.30 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன் முடியின் மகன் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை மற்றும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி இல்லத்துக்கு தடய அறிவியல் நிபுணர்கள் வந்துள்ளனர். ஆவணங்கள் ஏதும் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து இவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.