பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து கிராம மக்கள்  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டி  கிராமத்தில்  600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த வறுமை கோட்டுக்கு கீழ் வாழும்  பயனாளிகளின் பெயர்களை  தற்போது எடுத்த கணக்கெடுப்பு  பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு தகுதி இல்லாத பயனாளிகளை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாக இணைத்துள்ளதாகவும், இதனால் உண்மையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் இதனால் அரசின் சலுகைகள் தங்களுக்கு ஏதும் கிடைக்காமல் போகின்றன என குற்றம் சாட்டி 150 க்கும் மேற்பட்ட  அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில் ஏற்கனவே தங்கள் கிராமத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ஏழை விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்ததாகவும் ஆனால் தற்போது தவறான கணக்கீடை ஊராட்சி மன்றத் தலைவர் மேற்கொண்டு இதில் 300 பேரை நீக்கிவிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட அவர்களது உறவினர்கள் ஆதரவாளர்கள் என வசதி படைத்த பலரையும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக தவறான கணக்கீடு பதிவு செய்துள்ளதாகவும், அதிலும் அவரது உறவினர் ஒருவர் அரசு ஊழியராக உள்ள சூழலில் அவரையும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் சேர்த்து உள்ளதாகவும், இதனால் உண்மையில் ஏழை மக்களாக வறுமையில் வாடும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தங்கள் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

மேலும் தாங்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என தற்போது கணக்கீடு எடுக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்காமல் போவதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு மீண்டும் வறுமைக்கோட்டு பட்டியலை கணக்கீடு செய்து அதில் தகுதி வாய்ந்த பயனாளிகளை சேர்க்க வேண்டும் என்றும் அதேபோல் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட தகுதி இல்லாத பயனாளிகளை நீக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.