பொது இடங்களில் பிராங்க் வீடியோ எடுக்க தடை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள், நடைபயிற்சி மைதாங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் (பிராங்க் வீடியோ) தங்களுக்கு என்று யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் வெளியிட்டு வருவது சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் வீடியோ எடுக்கும் பலர் அதை தொழில்முறை ரீதியாக யூடியூப் சேனலில் வெளியிட்டு அதன் வாயிலாக பணமும் சம்பாதித்து வருகிறார்கள். குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் அமைதியான சூழ்நிலையினை விரும்பி பூங்காக்களை நாடி வருபவர்கள், நடைபயிற்சிக்கு மைதானங்களுக்கு செல்வோர், வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு இடையே மிகுந்த தாக்கத்தையும், அமைதியான சூழ்நிலைகளில் திடீர் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன.

சில வீடியோக்களில் நடிப்பவர்கள் பொதுவெளியில் முகம்சுழிக்கும் வண்ணம் பெண்களிடம் எதேச்சையாக நடப்பதுபோன்று தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரிகமாக நடிக்கிறார்கள். திடீரென நிகழும் வரம்பு மீறிய செயல்களானது சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல் ரீதியாக அதிர்ச்சியையும், மனரீதியாக திகைப்பையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோக்களை யூடியூப்பில் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றி அவருக்கு தெரியாமல் வெளியிடுவதால் அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுகிறது. குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் இச்செயலானது அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது. கோவை மாநகரிலும் சமீப காலமாக பிராங்க் வீடியோ என்ற பெயரில் ரேஸ்கோர்ஸ் சாலை போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில் குறும்புத்தனமான வீடியோ எடுப்பது தெரியவருகிறது.

இதுபொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும், புகாரும் எழுந்து வருகிறது. எனவே கோவை மாநகரில் பிராங்க் வீடியோ எடுத்தல் என்ற பெயரில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்துகொண்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வதுடன் அவருடைய சேனலும் முடக்கப்படும். அத்துடன் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சிறப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 4