புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் நகரத் துணை காவல் கண்காணிப்பாளர் ராகவி தலைமையில் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கேக்குகளை பகிர்ந்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் 2023 புத்தாண்டை வரவேற்று பணி சோர்வை மறந்து உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் 2023 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரக் கூடிய நிலையில் தமிழ்நாட்டிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 12 மணிக்கு நகர துணை காவல் கண்காணிப்பாளர் ராகவி தலைமையில் நகர காவல் நிலையம், திருக்கோகர்ணம் காவல் நிலையம், கணேஷ் நகர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையினர் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கேக்குகளை வழங்கியும் சாலைகளில் சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் 2023 ஆங்கில புத்தாண்டை பணி சோர்வை மறந்து உற்சாகமாக கொண்டாடினர்.

மேலும் காவல்துறையினர் குழு புகைப்படம் எடுத்ததுடன் அவ்வழியாக சென்ற பொது மக்களும் காவல்துறையினருடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த இளைஞர் ஒருவர் ஸ்டண்ட் செய்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
