பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்கிட உத்தரவிட்டு விவசாயிகளின் மனக்குறையைப் போக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவிதுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம்பெறாததை சுட்டிக்காட்டி தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் இயக்கங்களும், அறிக்கை வெளியிட்டன. தமிழக விவசாயிகளின் சார்பாக கரும்பையும் இணைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்குவதன் மூலம் அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ. 71 கோடி செலவு ஏற்படும். தமிழகத்தில் நிதிநிலை பற்றாக்குறையும் உள்ளது. இதுபோன்ற சவால்களுக்கு மத்தியிலும் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, தமிழக பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று போற்றப்படும் விவசாயிகளின் மனக்குறையை நீக்கும் பொருட்டும் இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளதை தமிழக மக்கள் அனைவரும் மனமகிழ்ந்து வரவேற்று பாராட்டுகின்றனர்.
தமிழக முதல்வரின் ‘திராவிட மாடல்’ ஆட்சி நாள்தோறும் எழுச்சி கண்டு வருவதற்கு இந்த அறிவிப்பு ஓர் அத்தாட்சியாகத் திகழ்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக மனமுவந்து வரவேற்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.