பென்னிக்குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் : ஆதாரம் இல்லாமல் தவறாக சொல்லக்கூடாது- முதல்வர் ஸ்டாலின்

பென்னிக்குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் கட்டப்படவுள்ளதாக, ஆதாரம் இல்லாமல் தவறாக சொல்லக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள பென்னிக்குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருவதாகக் கூறினார்.

அதற்கு குறுக்கிட்டு பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எவ்வளவு குறுக்கீடு வந்தது என்பது நெஞ்சில் உள்ளது; இருப்பினும் நேற்று முதலமைச்சர் குறுக்கிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால் தவறான கருத்தை உறுப்பினர் பதிவு செய்கிறார். அந்த இல்லம் பென்னிக்குவிக் இல்லம் இல்லை. காரணம் அந்த கட்டடம் 1912-ஆம் ஆண்டு கட்டப்பட்டப்பட்டுள்ளது. ஆனால் பென்னிக்குவிக் 1911 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் என்பதால் பென்னிக்குவிக் இல்லம் இல்லை என்று தெளிவாக தெரிவித்துள்ளோம் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பென்னிக்குவிக் இல்லத்தை அப்புறப்படுத்தி கலைஞர் பெயரில் நூலகம் கட்டுவதாக உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது தவறான கருத்து என்றார். மேலும், அது பென்னிக்குவிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால் அரசு அடிபணிய தயாராக இருப்பதாகவும், நிச்சயம் மாற்ற அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் ஆதாரம் இல்லாமல் கருத்தை பதிவுசெய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சராக இருந்தவர் செவி வழிச் செய்திகளை பேரவையில் பதிவுசெய்வது பொருந்ததக்கது அல்ல என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டு பேசினார்.