பெண் டாக்டரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் பீகார் ரவுடி கேரள போலீசாரல் அதிரடி கைது

பெண் டாக்டரை  சுட்டுக்கொன்ற விவகாரத்தில் பீகார் ரவுடியை கேரள போலீசாரல் அதிரடியாக கைதது செய்யப்பட்டது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவ கல்லூரியில், கண்ணூரை சேர்ந்த மானசா (வயது 24) என்பவர் படித்து முடிந்ததும், கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார்.

இந் நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி அன்று மதியம் கண்ணூரை சேர்ந்த ராகில் (31) என்ற வாலிபர் வீட்டுக்குள் புகுந்து மானசாவை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது என தெரியவந்தது. இந்தநிலையில் கொலையாளி பயன்படுத்திய துப்பாக்கி அவருக்கு கிடைத்தது எப்படி? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கோதமங்கலம் இன்ஸ்பெக்டர் மாகீன் தலைமையில் சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டது.

ராகில் கடந்த மாதம் எர்ணாகுளத்தில் இருந்து பீகாருக்கு ரெயிலில் பயணம் செய்ததை தனிப்படையினர் உறுதி செய்தனர். இதை தொடர்ந்து ராகிலின் செல்போனை ஆய்வு செய்த போது, பீகாரில் உள்ள சிலரிடம் அவர் அடிக்கடி தொடர்பு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே இன்ஸ்பெக்டர் மாகீன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் பீகார் செற்று  அங்கு நடத்திய விசாரணையில், கொலையாளிக்கு துப்பாக்கியை விற்பனை செய்தது, சோனுகுமார் மோதி (21) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை அந்த மாநில போலீசாரின் உதவியுடன் தனிப்படையினர் கைது செய்தனர்.

சோனுகுமார் மோதி, அங்குள்ள பிரபல ரவுடி. அவரை கேரள தனிப்படையினர் பிடிக்க முயன்ற போது, சோனுகுமார் மோதியின் உறவினர்கள், நண்பர்கள் தடுத்துள்ளனர். நிலைமை விபரீதமாவதை அறிந்த தனிப்படையினர், அங்குள்ள சிறப்பு படையினரை வரவழைத்து சோனுகுமார் மோதியை மடக்கி பிடித்தனர், பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கேரளா கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தனிப்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.