பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றங்கள் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக தோழி என்ற ரோந்து இருசக்கர வாகனங்களை டிஐஜி துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பழனி மஹாலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற நடவடிக்கைகள் தடுப்பு பயிற்சி முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், வரதட்சணை கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவற்றை காவலர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமில் மடிக்கணினிகள் மற்றும் தகவல்கள் அடங்கிய கை புத்தகங்கள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்த 24 காவல் நிலையங்களுக்கும் தலா ஒரு வாகனம் வீதம் 24 பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி கொடியசைத்து தோழி இருசக்கர வாகனங்களை தொடங்கி வைத்தார்.
பெண்கள் உதவி சேவைக்காக கட்டணமில்லா தொலைபேசி எண் 181, குழந்தைகள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என பேசினார். இந்த 24 வாகனங்களும் 24 மணி நேரமும் செயல்படும், அது சம்பந்தப்பட்ட பெண் காவலர்கள் ரோந்து பணியில் செயல்படுவார்கள் என தெரிவித்தனர்.