பெங்களூரு நகர முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: ரூ.42 கோடி மதிப்புள்ள ரூ.500 நோட்டுகள் பறிமுதல்

பெங்களூருவில் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் வீட்டில் கட்டுக்கட்டாக பதிக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.42 கோடி மதிப்புள்ள நோட்டுகளை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வரிஏய்ப்பு புகார் தொடர்பாக பிஎஸ்ஆர் இன்பிராட்டெக் மற்றும் ஸ்டார் இன்பிராட்டெக் ஆகிய 2 ஒப்பந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அந்நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்கள் உட்பட 25க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

இதில் பெங்களூரு மாநகராட்சியின் 95வது வார்டு முன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தாமா வீட்டில் பூட்டிவைக்கப்பட்டிருந்த அறையின் உள்ளே மெத்தைக்கு அடியில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.500 நோட்டுகளை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்தனர். காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தாமாவின் கணவர் அம்பிகாபதி கட்டட ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்த நிலையில் வரிஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த தம்பதிக்கு சொந்தமான ஆர்டி நகர் பகுதியில் உள்ள 2 வீடுகளில் நடைபெற்ற சோதனையில் ரூ.42 கோடி ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.