பெகாசஸ் விவகாரம்:தொலைபேசிகள் ஒட்டுகேட்பு வழக்கு விசாரணை செப்-13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பெகாசஸ் செயலி மூலம் முக்கிய தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை 13ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இஸ்ரேல் நாட்டின்  என்.எஸ்.ஓ. அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச நாளிதழ்கள் தெரிவித்து இருந்தன. இதனால் நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே பெகாஸஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்டது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும், மேலும் இது தொடர்புடைய நிறுவனங்களை அடையாளம் காண வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் உட்பட 12 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற அல்லது தற்போதைய நீதிபதி முன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளன.

தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 17ம் தேதி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது பெகாசஸ் விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா? என தலைமை நீதிபதி கேள்வியெழுப்பினார்.  இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா,பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம். ஆனால் அதற்கு அவகாசம் வேண்டும், என தெரிவித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அவகாசம் வழங்குவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் விவரங்கள் அனைத்தும் முழுமையாக இருந்தால் சரி தான் என தெரிவித்தார். இதையடுத்து ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், அடுத்த விசாரணையை செப்டபர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.