பெகாசஸ் விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பெகாசஸ் விவகாரத்தில் சர்ச்சைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் என்ற உளவு மென்பொருள், மூலம் 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்களின் செல்போன் எண்கள் உளவுபார்க்கபட்டதாக கூறப்படுகிறது.

அந்த பட்டியலில், 189 பத்திரிகையாளர்கள், 600க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், 65 தொழிலதிபர்கள், 85 மனித உரிமை இயக்கவாதிகள், பல்வேறு நாட்டு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் செல்போன் எண்களும் உள்ளன. அவர்களில் 2 அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், ஒரு நீதிபதி, 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் 80 சதவீத பணிகள் நடைபெறாமல் இருந்தன.

மேலும் பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்து, இதில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த மனு இன்று தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு இரண்டு பக்க பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், பெகாசஸ் விவகாரத்தில் அரசுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. ஊகங்களின் அடிப்படையிலேயே வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், ஆதாரமற்ற உறுதிப்படுத்தப்படாத முழுமையான தகவல்கள் எதுவும் இல்லாத அறிக்கைகளின் அடிப்படையிலேயே மனுக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தியர்கள் யாரையும் உளவு பார்க்கவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் விளக்கமளித்துள்ள மத்திய அரசு, எனினும் இந்த விவகாரத்தில் எழுப்பப்பட்ட சர்ச்சைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்படுமென குறிப்பிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.