பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்த வழக்கு வருகிற 5ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது வருகிற 5ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் என்ற உளவு மென்பொருள், மூலம் 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்களின் செல்போன் எண்கள் உளவுபார்க்கபட்டதாக கூறப்படுகிறது.

அந்த பட்டியலில், 189 பத்திரிகையாளர்கள், 600க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், 65 தொழிலதிபர்கள், 85 மனித உரிமை இயக்கவாதிகள், பல்வேறு நாட்டு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் செல்போன் எண்களும் உள்ளன. அவர்களில் 2 அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், ஒரு நீதிபதி, 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த பிரச்சனையை காரணமாக வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் தொடங்கிய நாள் முதல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இதேபோன்று ஏற்கனவே கேரள மாநில எம்.பி. எம்.எல்.சர்மா உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு வருகிற 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற இண்ணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையானது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.