பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என என மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்து, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டன.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக விவகாரத்தில் சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பத்திரிகையாளர்கள் என்.ராம் உள்ளிட்டோர் பொது நல மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் 2 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியர்கள் யாரையும் நாங்கள் உளவு பார்க்கவில்லை . பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.