எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, நெரிஞ்சிபேட்டை நீர்மின் கதவணையில் பராமரிப்புப் பணி முடிந்தையடுத்து நீர் தேக்கி வைக்கப்பட்டது. இதனால் சேலம் – ஈரோடு மாவட்ட இடையே விசைப்படகு போக்குவரத்து 20 நாட்களுக்கு பிறகு தொடங்கியது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அப்போது நீரின் விசையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக காவிரி ஆற்றின் செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி ஊராட்சி கோட்டை உள்ளிட்ட இடங்களில் கதவணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கதவணைகளில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் 15 நாட்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அப்போது, தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வெளியேற்றப்படும்.
இந்நிலையில் சேலம் – ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில் பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. தற்போது, கதவணையில் பராமரிப்பு கடந்த 4ம் தேதி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அணையில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், தண்ணீரின்றி குட்டையாக காட்சியளித்தது. இதனால் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டம் இடையிலான விசைப்படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி பராமரிப்புப் பணிகள் முடிந்தையடுத்து, இரவு மதகுகள் மூடப்பட்டு, தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை முதல் மின்சார உற்பத்தியும் தொடங்கியது. இதனிடையே, கதவணை முழுவதும் தண்ணீர் தேங்கியதையடுத்து, விசைப்படகு போக்குவரத்து மீண்டும் துவங்கியது. இதனால் விசைப்படகை பயன்படுத்தி வேலைக்கு செல்வோர், விடுமுறையில் சுற்றிபார்க்க வருபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.