பூலாங்குறிச்சி தமிழ் கல்வெட்டு உட்பட ஐந்து பண்டைய தமிழ் கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படும் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக அறிவித்த தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பூலாங்குறிச்சி. இங்குள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979-ல் ஆய்வாளரான மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதைச் செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை பொறித்துள்ளார்கள். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வந்த நிலையில் கல்வெட்டைக் கண்டுபிடித்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்நாளைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் தற்போதைய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசுவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள், அதன் பயனாக தற்போது புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முதல் கூட்டத்தொடரிலேயே பாதுக்கக்கப்பட்ட சின்னமாக அறிவித்திருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பாணை
3 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய எம்எல்ஏ தங்கம் தென்னரசு சந்தித்தபோது

கல்வெட்டின் சிறப்பு

தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறி வரும் இக்கல்வெட்டில் சில எழுத்துகள் தமிழியாகவும், சில எழுத்துகள் வட்டெழுத்தாகவும் உள்ளன. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு. இதிலுள்ள ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி), திருவாடானை அருகே விளமர் ஆகிய ஊர்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சேர்ந்த வாசிதேவனார் கோட்டத்தையும் அமைத்ததாகக் கூறுகிறது. இவற்றிற்கு வேண்டியதைச் செய்வதாக அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகிய மூன்று பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலதானம், ஊர் ஆகியவற்றை பிரம்மதாயம், மங்கலம் ஆகிய சொற்களால் குறிப்பர். இச்சொற்கள் காணப்படும் மிகப்பழமையான கல்வெட்டு இங்குதான் உள்ளது. கல்வெட்டில் வரும் மன்னர்கள் களப்பிரர் மன்னர்களாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை 6 வரிக்கும் குறைவான சிறிய கல்வெட்டுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு 22 வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டு காணப்படுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இது வட இந்திய மன்னன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்கு இணையான சிறப்புக்கொண்டது என உறுதியாக கூறப்படுகின்றது. மேற்கண்ட சிறப்புகளை உடைய கல்வெட்டு உள்ளிட்டவற்றை
தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்திருப்பதற்கு ஒட்டு மொத்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 9 = 14

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: