சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
புளியந்தோப்பில் கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வீடுகள் தரமற்றதாக இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்த ஊரக தொழில்துறை மற்றும் குடிசை மாற்றுவாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசனும், அமைச்சர் சேகர்பாபுவும் புளியந்தோப்பிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தொடர்பாக எழும்பூர் தொகுதி உறுப்பினர் பரந்தாமன், மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகை ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். தீர்மானத்தின் மீது பேசிய எம்எல்ஏ பரந்தாமன், ‘குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் எழுந்துள்ளதால் இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த கட்டடம் 2018ல் தொடங்கப்பட்டு 2019ல் முடிக்கப்பட்டது.தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே உதிரும் கட்டிடம் கட்டிய ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி. 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டிமுடித்த அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.இந்த கட்டடம் கட்டி முடித்த பிறகு இதற்கு சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், கட்டட ஒப்பந்ததாரர் மீதும் கிரிமினல் வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இந்த கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது” என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், புளியந்தோப்பு தரமற்ற அடுக்குமாடி கட்டடம் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் அதிகாரியாக இருந்தாலும், ஒப்பந்ததாரராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.கட்டுமான பணியில் முறைகேடு நடந்தது தெரியவந்தால் ஒப்பந்ததார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புளியந்தோப்பு குடியிருப்பு ரூ.112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.குடியிருப்பை ஆய்வு செய்ய ஐஐடி குழுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.ஐஐடி குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் ,என்றார்.