இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வாகியுள்ள காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவன் பிரானேசை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், புதுவயல், ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர் எம்.பிரனேஷ். இவர் சிறுவயது முதலே செஸ் விளையாட்டில் அதிக ஆர்வமுடன் காணப்பட்டார். இவரது பள்ளி நிர்வாகம், மற்றும் பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம் காரணமாக, ஸ்வீடனில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் “இந்தியாவின் 79 வது” கிராண்ட் மாஸ்டர் “தமிழ்நாட்டின் 28 வது” கிராண்ட் மாஸ்டர் எனும் சிறப்பை பெற்று நம் மண்ணுக்கும்,வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு வித்யாகிரி கல்விக் குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் நறுவிழி கிருஷ்ணன், செயலாளர் மற்றும் தாளாளர் முனைவர். ஆர். சுவாமிநாதன், பொருளாளர் முகமது மீரா, தலைமை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சாய் சரண்,பள்ளி முதல்வர்கள் ஹேம மாலினி சுவாமிநாதன்(காரைக்குடி),குமார்(புதுவயல்)துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்:சிறிய நகரான காரைக்குடியில் பிறந்து, 15 வயதே நிரம்பிய பிரானேஷ் தனது சிறுவயதிலேயே காமன்வெல்த் உள்ளிட்ட ஆசிய செஸ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றவர் அதன் மூலம் பன்னாட்டின் பார்வைக்கு ஆளாகி இருப்பவர் இன்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார் மென்மேலும் பிரானேஷ் அவர்களுக்கு பதக்கங்கள் குவியட்டும் என்று நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டி இருக்கிறார்.
