புதுச்சேரியில் பாண்லே பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

புதுச்சேரியில் இன்று முதல் பாண்லே பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது. புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே, உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்கிறது. கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர். அதேநேரத்தில் பால் பற்றாக்குறையால் வெளிமாநிலங்களில் இருந்து பாலை பாண்லே கொள்முதல் செய்து வருகிறது.

உள்ளூர் கொள்முதலை விட வெளியூரில் வாங்கும் பாலுக்கு அதிக விலை தருவதாகவும் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது பாண்லே பால் விநியோகம் சீராக இல்லாததால் போராட்டமும் அதிகரித்தது. அத்துடன் பாண்லே நிர்வாக குளறுபடிகளால் சிக்கலில் உள்ளது. இச்சூழலில் பாலின் கொள்முதல் விலையை ரூ. 34-ல் இருந்து ரூ.37 ஆக உயர்த்தி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மேலும், பாலின் விற்பனை விலையை உயர்த்தாமல் இருந்தார். இச்சூழலில் பாண்லே பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுகிறது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தைய்யா நேற்று வெளியிட்ட உத்தரவில், “நீல நிற பாக்கெட் (டோன்ட் மில்க்) ரூ.42-ல் இருந்து ரூ.46-க்கும், பச்சை நிற பாக்கெட் (ஸ்பெஷல் டோன்ட் மில்க்) ரூ.44-ல் இருந்து ரூ.48-க்கும், ஆரஞ்சு நிற பாக்கெட் (ஸ்டேன்டர்ட் மில்க்) ரூ.48-ல் இருந்து ரூ.52-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக இரு பாக்கெட் பால் அறிமுகமாகிறது. டபுள் டோன்ட் மில்க் என மஞ்சள் நிற பால் பாக்கெட் ரூ.42-க்கும், ஃபுல் கீரிம் பால் என சிவப்பு நிற பாக்கெட் பால் ரூ.62-க்கும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 − 23 =