புதுச்சேரியில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சிறப்பு கூறு நிதி மூலம் நிலம் கையகப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் ரங்கசாமி பதில் அளித்தார். புதுச்சேரியில் பட்டியலினத்தினருக்கான சிறப்பு கூறு நிதியில் 49 சதவீதம் மட்டுமே செலவு செய்ததாக திமுக புகார் தெரிவித்திருந்தது.
எஞ்சிய 51 சதவீதம் நிதியை செலவிடாதது தவறு என்று திமுக உறுப்பினர் சிவா, சுயேச்சை உறுப்பினர் அங்காளன் ஆகியோர் சட்ட பேரவையில் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் பட்டியலினத்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். தொடர்ந்து பட்டியலினத்தவர் மேம்பாட்டு பணிக்கு தனி கவனம் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.