தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவல் 15% எட்டியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரியும், புதுச்சேரி மாவட்ட கலெக்டருமான வல்லவன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, புதுச்சேரியில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். சண்டே மார்க்கெட், கடற்கரை சாலை, வணிக வளாகங்கள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.