புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருங்காட்சியக களப்பயணம்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் களப்பயணமாக புதுக்கோட்டை அருங்காட்சியகத்தைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்று மேல்நிலைக் கல்வியில் அடியெடுத்து வைக்கின்ற பள்ளி முதல் வேலை நாளில் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் ஆலோசனைப்படி, பதினோறாம் வகுப்பு மாணவர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.

புதுக்கோட்டை அருங்காட்சியகம் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாநகரின் திருக்கோகர்ணத்தில் 1910 ஆம் ஆண்டு புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பெற்ற பழமையான அருங்காட்சியகம் ஆகும். இது தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்களில் இரண்டாவது பெரிய அருங்காட்சியகமாக கருதப்படுகிறது.  தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் இந்த அருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியரால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், கனிமங்கள், மரப்படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகைப் பொருட்கள், கூத்துக் கலைப்பொருட்கள், பனையோலைகள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பானைகள், சுடுமண் படிமங்கள், தொல்லுயிர்ப் படிமங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அருங்காட்சியக களப் பயணத்தில் தங்களுக்கு புதுவிதமான அனுபவங்கள் கிடைத்தன என எல்லா மாணவர்களும் தெரிவித்தார்கள்.

பி. ஹரிஹரன் எனும் பதினோறாம் வகுப்பு மாணவன் கூறும்போது “முதலில் இது மாதிரி ஒரு வித்தியாசமான அனுபவத்தை எங்களுக்கு மேல்நிலை வகுப்புகள் தொடங்கும் முதல் நாளில் ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் நமது மாவட்டத்தில் நமது பள்ளிக்கு அருகில் அமைந்திருக்கிறது என்பதில் மிகுந்த பெருமை அடைகின்றோம். இதுவரையில் காணாத பல பொருட்களின் உருவங்களை, வடிவங்களை, சிறப்புகளை கண்டு வியந்தோம், அருங்காட்சியக களப்பயணம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று கூறினார். 

பி. அட்சயஸ்ரீநிதி என்ற மாணவி கூறும்போது “அருங்காட்சியகம் என்பது என்ன? அங்கு என்னமாதிரியான பொருட்கள் இருக்கும்? என்றெல்லாம் தெரியாத  எங்களுக்கு உள்ளே நுழைந்து காட்சி படுத்தப்பட்டிருந்த தொல்லியல் சார்ந்த பொருட்களை கண்டவுடன் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. புதுக்கோட்டை ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்களால் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் மன்னர் பரம்பரை தொடர்பான பல செய்திகளை, ஆதாரங்களை கண்டு வியந்தோம்”  என்று கூறினார்.

பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும்போது ”ஊரெங்கும் இல்லாத புதுமையாக எங்கள் பள்ளியில் எல்கேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரையும் வகுப்பறைகளைத் தாண்டி வெளியே களப்பயணங்களாக அழைத்துச் சென்று பல்வேறு வகையான அனுபவங்களை பெறச் செய்கின்றோம்”  என்று கூறினார்.   தனியார் பள்ளியில் மாணவர்களை அழைத்துச் செல்லும் இதுமாதிரியான களப்பயணங்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் பெற்றோர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

21 − 13 =