புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளியில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கு எளிய முறையில் தமிழ் கற்பித்தல் பயிற்சி

தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தனியார் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கான எளிய முறையில் தமிழ் கற்பித்தல் பயிற்சியானது மௌண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி முதல்வர் ஜலஜாகுமாரி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா முன்னிலை வகித்து ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழையும்போது மலர்ந்த முகத்துடன் நுழைதல் வேண்டும், ஆசிரியரைப் பிடித்தால் மாணவர்களுக்கு அவர்கள் நடத்தும் பாடம் பிடிக்கும் என்றும் எளிய முறைகளை கூறி நினைவில் பதியவைப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று உரையாற்றினார், மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் அறவாழி சிறப்பு விருந்தினர்களை வரவேற்று கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் சி.சேதுராமன் பேசுகையில் திருக்குறளின் பெருமைகள், சரஸ்வதி மஹால் உருவான வரலாறு ஜி.யு.போப் தமிழுக்காற்றிய தொண்டுகள் ஆகியவற்றை சுவாராஸ்யமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். அதனைத் தொடர்ந்து திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் செந்தாமரைக்கண்ணன் கதைவழி கற்பித்தல், பாடல்பாடி கற்பித்தல், கற்றதை நினைவுகூற வைத்தல் நாபிறழ் பயிற்ச்சிக்கு முக்கியதுவம் கொடுத்தல் ஆகிய பல எளிய வழிமுறைகளைக் கூறினார்.

மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளி தமிழாசிரியை ஞானசெல்வி மாணவர்கள் குறில் நெடில் வேறுபாடுகள் அறிந்துகொள்ளல் எழுத்துப்பிழையின்றி எழுதும் முறை ஆகியவற்றை செயல்பாடுகள் வழி விளக்கி கூறினார், மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளி தமிழாசிரியை உமாமுத்து நன்றியுரை வழங்கினார், இறுதியில் நாட்டுப்பண்ணுடன் பயிற்ச்சிக் கூட்டமானது இனிதே நிறைவுற்றது. விழா நிகழ்வுகளை மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளி தமிழாசிரியர்கள் க.கண்ணன் மற்றும் லெ.சின்னச்சாமி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.