புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் 353 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று வழங்கினார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கரைகொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு சென்றுவரும் வகையில்  விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வருகிறார்கள். அதன்படி இன்றையதினம் கீரமங்கலம் பேரூராட்சியில் 353 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. அதன்படி கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 148 மாணவர்களுக்கும், கீரமங்கலம்; அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 205 மாணவிகளுக்கும் என ஆகமொத்தம் 353 மாணவ, மாணவிகளுக்கு ரூ.17,01,000 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழக அரசால் வழங்கப்படும் இத்தகைய மிதிவண்டிகளை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் பள்ளிக்கு சரியான நேரத்திற்குள் சென்றுவருவதுடன்,  உடற்பயிற்சியாகவும் அமைகிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில், திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, கீரமங்கலம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.