
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 418 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், புதுக்கோட்டை வட்டம், கணபதிபுரம், தொண்டைமான் ஊரணியைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது வாரிசுதாரர் ரமேஷ் என்பவரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவித்தொகை ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.