புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வங்கி பற்று அட்டைகளை தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், தேக்காட்டூர் கிராமம், சிவபுரம் ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் அம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனும், மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, உடனிருந்தார். தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் இவ்வரசு செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் கலைஞர் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் தொடங்கி வைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் 3,391 மகளிருக்கும் மற்றும் ஆலங்குடி வட்டத்தில் 4,431 மகளிருக்கும் என மொத்தம் 7,822 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகள் நேற்றையதினம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.வை.முத்துராஜா, சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் மேகலாமுத்து (அரிமளம்),வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்),மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி),  ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம்,  முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் சந்திரசேகர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மு.க.ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் விஸ்வநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.