புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சட்டம், ஒழுங்கு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சட்டம், ஒழுங்கு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்காக விழா ஒருங்கிணைப்பாளர்கள் விநாயகர் சிலை அமைப்பதற்கு நில உரிமையாளர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரதுறையிடம் தடையின்மை சான்றுகளை பெற்று உரிய அனுமதியினை வருவாய்த்துறையிடம் பெற வேண்டும்.

மேலும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளின்படி, நீரில் கரையக்கூடிய, நச்சு இல்லாத இயற்கை சாயங்கள் பூசப்பட்ட சிலைகளை தூய களிமண்ணால் தயாரிக்க வேண்டும். சிலை அமைத்து வழிபாடு செய்யும் இடம் மற்றும் அதனை சுற்றி தேவையான முதலுதவிப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பிடிக்காத பொருட்கள் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கூம்பு வடிவிலான ஒலி பெருக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்கு மாற்றாக பெட்டி வடிவிலான ஒலி பெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விழா ஒருங்கிணைப்பாளர்கள் 2 தன்னார்வலர்களை நியமித்து சிலையை பாதுகாக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மற்ற மதத்தினரை பாதிக்கும், துன்புறுத்தும் வகையில் சத்தமாக கோஷங்களை எழுப்ப அனுமதிக்கக் கூடாது.

மேலும் காவல்துறையால் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலையை வாகனங்களில் கொண்டு சென்று, மாவட்ட நிர்வாகத்தால் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். அவ்வாறு செல்லும்போது பட்டாசு வெடிபொருட்களை  வெடிக்க அனுமதி கிடையாது. எனவே விழாக் குழுவினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.