புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ரூ.25.67 கோடி மதிப்பீட்டில் 3,391 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அனைத்துத்துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இவ்விழாவில், சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அனைத்துத் துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் காலை சிற்றுண்டித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள், புதுமைப் பெண் திட்டம், மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் மகப்பேறு உதவித்தொகை வழங்கும் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், எண்ணும் எழுத்தும் இயக்கம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், அரசு பொதுத் தேர்வுகளில் மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் குறித்தும், முதல்வரின் முகவரி, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சாலை, குடிநீர் திட்டப் பணிகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் திட்டங்கள், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், வருவாய்த்துறையின் சார்பில், இ-சேவை மையம், சிறப்பு செயலாக்கத் திட்டத்தின்கீழ் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள் மூலமாக தகுதியான நபர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும், பொதுமக்கள் அனைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை),குழந்தைசாமி (இலுப்பூர்), சிவக்குமார் (அறந்தாங்கி பொறுப்பு), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.