தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்விற்கு 10796 மாணவிகள்,9758 மாணவர்கள் என 20 ஆயிரத்து 554 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களில் 10 ஆயிரத்து 303 மாணவிகளும்,8 ஆயிரத்து 903 மாணவர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 206 மாணவர்கள் தேர்வெழுதினார்கள். தேர்விற்கு 490 மாணவிகள்,858 மாணவர்கள் என 1348 பேர் வருகை தரவில்லை.

இத்தேர்வினை அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளி என மொத்தம் 190 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதினார்கள். தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் மாணவர்களின் பதிவெண் எழுதப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 97மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
தேர்வு பணிகளில் பறக்கும் படையினர், கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத கல்வித்துறை பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிட்டது. இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுத இருந்த மாணவியர்களை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா அவர்கள் நேரில் சந்தித்து தமிழக முதல்வரின் அறிவுரைப்படி தேர்வினை தன்னம்பிக்கையுடனும்,தைரியத்துடனும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் பாடப்புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் என்றும் மாணவ,மாணவியர்கள் பயப்பட வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.