புதுக்கோட்டை மாவட்டத்திற்கே நோய் பரப்பும் வார சந்தை பொதுமக்கள் அச்சம் நகராட்சி நிர்வாகம் மெத்தனம்

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான வெள்ளிக்கிழமை மட்டும் நடைபெறும் வாரச்சந்தையால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அனைவருமே நோய்வாய்ப்பட்டு அவதிப்பட போகும் காலம் வெகுவிரைவில் உள்ளது என்பது தெரிய வருகிறது.

கொரோனா பேரிடருக்கு பிறகு பலவிதமான காய்ச்சல்கள் புதிய புதிய பெயரில் உருவாகி குழந்தைகளை தாக்கி மருத்துவமனையில் தங்ககூட இடம் இன்றி பெற்றோர்கள் அவதியுற்று வரும் சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும் நோய் பரப்பும் தாய் வீடாக புதுக்கோட்டை நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இதை காலம் காலமாக கண்காணித்து வரும் நகராட்சி நிர்வாகம் அதை சரி செய்ய சற்றும் களமிறங்காதது வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் மீன் இறைச்சி வாரச்சந்தை பொதுமக்கள் சென்றுவர தகுதியற்ற இடமாகவும் பன்றிகள், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது கழிவுகள் மத்தியில் உணவுப் பொருட்களை வாங்கிச் சென்று வீட்டில் சமைத்து சாப்பிட்டால் உடல் நலம் குன்றாமல் இருக்குமா? இதை ஏன் நகராட்சி உணர மறுக்கிறது என தெரியவில்லை. 50 அடி தூரத்தில் இருக்கும் நகராட்சி நிர்வாகம் இதனை வேடிக்கை பார்த்து வருகிறது. இந்த சாக்கடை குழிகளுக்குள் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிடித்து வரக்கூடிய கடல் உணவு பொருட்கள் அப்பகுதி மீனவர்களால் கொண்டு வந்து காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை விற்பனை செய்வது சுமார் 50 வருட காலமாக நடைபெற்று வருகிறது.

இதனை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அத்தனை பகுதிகளில் இருந்து வரக்கூடிய கிராம பகுதி பொதுமக்கள் மீனவர்களால் உடனடியாக பிடித்து கொண்டு வரப்படும் உயிர் மீன் என்பதால் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இப்படி இருக்கையில் இதன் மூலம் நகராட்சிக்கு சொற்ப வருமானமும் வருவதை யாரும் மறுக்க இயலாது. அப்படி இருக்கையில் வெள்ளிக்கிழமை மீன் மார்க்கெட்டிற்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையோ குறைந்தது ஐந்தாயிரம் பேர் வரை இருக்கையில் இவர்களின் நலனில் கொஞ்சமும் அக்கறையின்றி மெத்தனப்போக்கோடு நிர்வாகம் இருப்பதை நன்கு காண முடிகின்றது.

எங்கு பார்ப்பின் குப்பை மேடுகள் நூற்றுக்கணக்கான பன்றிகள், மற்றும் நாய்கள், பல கோடி கணக்கான கொசுக்கள் இவற்றின் உள்ளே தான் பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான மீன், நண்டு உள்ளிட்ட கடல் வாழ் இறைச்சிகளை வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுகின்றனர். குறுகலான சாலையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் கூடுவதாலும் வெள்ளிக்கிழமை இப்பகுதி மிகுந்த சிக்கலான பகுதியாகவே இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். சில நேரங்களில் பொருட்களையும் நாய்கள் மற்றும் பன்றிகள் தூக்கிச் சென்று விடுவதால் பெரிய அளவில் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள நகராட்சி என்றால் இதனை உடனடியாக சரி செய்ய முன்வர வேண்டும் என்பது புதுகை வரலாற்றின் எதிர்பார்ப்பு.

தொலைநோக்கும் அக்கறையும் இல்லாத நிர்வாகம்

1912 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை நகராட்சியானது தொண்டைமான் மன்னர்கள் ஆட்சி காலத்திலேயே நகராட்சி அந்தஸ்துடன் இருந்த ஒரு நிர்வாகம். சுமார் 110 வருடங்களை கொண்ட நகராட்சி என்றால் தமிழகத்தில் புதுக்கோட்டையை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் பெருமையும் கொள்ள வேண்டும். ஆனால் இங்கு அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் சரிந்து போய் சரி செய்ய யாரும் இல்லாத நிலை நீடிக்கிறது. மீன் மார்க்கெட்டை பொருத்தமட்டில் சில தனிநபர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பணப்பலத்தை பயன்படுத்தி சிலர் தங்கள் பெயரில் நகராட்சி இடத்தை அபகரிக்கும் பணி இன்றும் நீடிக்கிறது. அதை இன்றைய நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. மக்களுக்கு ஆரோக்கியமான சுகாதாரமான மீன் வியாபாரிகள் வந்து தொழில் செய்வதற்கு ஒரு ஏதுவான ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொடுக்கவும் நகராட்சி நிர்வாகம் இதுவரை முன்வரவில்லை. மழைக்காலம் என்றால் இந்த இடத்தை சொல்ல வேண்டியதில்லை மீனைப் பிடித்த வியாபாரிகள் இங்கு கொண்டு வந்து தான் விற்பனை செய்கிறார்கள் அதை வாங்கப் போகும் பொது மக்கள் மழைநீர், கழிவுநீர் கலவையில் நீந்தி செல்லும் அவலம் தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 1