புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயத்தினை எம்எல்ஏ வை.முத்துராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகிலிருந்து, பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயத்தினை, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  வை.முத்துராஜா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வு மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது. காலஞ்சென்ற தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் 13, 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான விரைவு மிதிவண்டி போட்டிகள் மாவட்ட ஆட்சியர் ஆணைக்கிணங்க நடைபெற்றது.

இப்போட்டிகளில் 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 25 மாணவர்களும், 13 மாணவிகளும், 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 14 மாணவர்களும், 12 மாணவிகளும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில்  9 மாணவர்களும், 11 மாணவிகளும் கலந்துகொண்டார்கள். இந்த அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் மருத்துவக்கல்லூரி பிரதான நுழைவுவாயிலிலிருந்து துவங்கி தஞ்சாவூர் – திருச்சி பைபாஸை இணைக்கும் சுற்றுச்சாலையில் நடைபெற்றது.

 மேற்காணும் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகளின் பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 14.09.2022 அன்று மாலை 5.00 மணிக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வழங்கவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையேற்க உள்ளார்கள்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மாவட்ட மிதிவண்டிக் கழக செயலாளர் மு.அசோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

53 − 47 =