புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் நகராட்சி தொடக்கப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முழுவதும் இன்றையதினம் நடைபெறும் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் 01 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 – 30 வயது வரை உள்ள மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, மொத்த குடற்புழு தொற்று பாதிப்பில் இந்தியா 25மூ பங்களிக்கிறது. கொக்கிப் புழு, உருண்டை புழு, சாட்டை புழு போன்றவை சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தின் மூலம் பரவுகிறது.

அதிகமான புழுத் தொற்று இருப்பின் வயிற்றுவலி, பசியின்மை, உடல் சோர்வு, இரத்தசோகை போன்ற அறிகுறிகள் தோன்றும். கழிவறையை பயன்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், காய்கறிகளை கழுவிய பின் உட்கொள்ளுதல், சுத்தமான குடிநீரை பயன்படுத்துதல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல், காலணிகள் அணிதல், உணவுக்கு முன்னரும், கழிவறையை பயன்படுத்திய பின்னும் கைகளை சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்வதின் மூலம் குடற்புழுத்தொற்றினை தடுக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமில், 01 – 19 வயதுடைய 4,02,118 குழந்தைகள் மற்றும் 20 – 30 வயதுடை  1,15,070 மகளிர் என ஆகமொத்தம் 5,17,188 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1 – 2 வயதினருக்கு 1/2 மாத்திரையும் (200 மில்லி கிராம்) மற்றும் 3 – 30 வயதினருக்கு 1 மாத்திரையும் (400 மில்லி கிராம்) வழங்கப்படுகிறது.

குடற்புழு நீக்க மாத்திரைகள் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகளில் 6,257 பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் 16.09.2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இம்முகாமினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மரு.அர்ஜுன்குமார்,நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3