புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவது குறித்து, முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதல்வர் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 15.09.2022 அன்று துவக்கி வைக்கவுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 8 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைவராகக் கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் உடலுக்குத் தேவையான ஆற்றலை   காலை உணவு அளிப்பதோடு,  இரவு உணவுக்கு பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தவிர்ப்பதாக அமையும். அதன்படி திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில்  உப்புமாக வகையும், செவ்வாய்க்கிழமையில் கிச்சடி வகையும், புதன்கிழமையில் பொங்கல் வகையும், வெள்ளிக்கிழமையில் கிச்சடி மற்றும் இனிப்பு வகையும் வழங்கப்படவுள்ளது.  ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 50 கிராம் அரிசி,கோதுமை, ரவை, சேமியா,உள்ளூரில் அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்காக 15 கிராம் பருப்பும், சமைத்தப் பிறகு 150 முதல் 200 கிராம் உணவு மற்றும் 60 கிராம் காய்கறிகளுடன் சாம்பாரும்  தினசரி காலை 08.15 மணி முதல்   08.50 மணிக்குள் மாணாக்கர்களுக்கு  வழங்கப்படவுள்ளது. 

இத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுத்துறைகள் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. காலை சிற்றுண்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம், உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவன நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகின்றனவா என்பது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலரால் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மேலும் காலை உணவுத் திட்டத்தில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பட்டியலின் அடிப்படையில் மாணவர்களின் உடல் நலனைக் கவனத்தில் கொண்டு தரமான மற்றும் சுகாதாரமான உணவைப் போதுமான அளவிற்கு வழங்குவதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்து, இத்திட்டத்தினை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேவிகா ராணி, நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 6 =