புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.49.38 இலட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதிய திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. பின்னர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில்  இன்றையதினம்  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதிய திட்டப் பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், குரும்பூர் ஊராட்சியில், திருச்சி – மீமிசல் சாலையிலிருந்து பட்டரைச்சேரி வரையுள்ள சாலை, ஒன்றிய பொதுநிதியிலிருந்து    ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி, அரசர்குளம் (தென்பாதி) முஸ்லீம் குடியிருப்பில் ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட்சாலை அமைக்கும் பணி மற்றும்  மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட்சாலை அமைக்கும் பணி, ஆயிங்குடியில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணி, வல்லவாரியில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.22.88 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ. 49.38 இலட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று, எஸ்.குளவாய்பட்டி, முத்துபட்டிணம், மேல குளவாய்பட்டி, கத்தக்குறிச்சி, நம்புகுழி, ஆவுடையார்பட்டி, பாலன்நகர், சேந்தாக்குடி, வெண்ணாவல்குடி, அங்குரான்பட்டி, கோயில்பட்டி, கீழையூர், ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில்  எஸ்.குளவாய்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையமும்  மற்றும்  மேற்பனைக்காடு, அரசர்குளம், வல்லவாரி, நெய்வத்தளி, மருதங்குடி, மாங்குடி, பெரியாளுர், மாத்தூர், ஆயங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆயங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

எனவே விவசாயிகள் அனைவரும் தாங்கள் விளைவித்த நெல்லினை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 89 = 97