புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது – மாவட்ட கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:- உலக அளவில் குழுவின் இரண்டாவது தாக்கம் முடிவுக்கு வரும் நிலையில் மூன்றாவது அலை அடுத்த சில மாதங்களில் தாக்கக் கூடும் என மருத்துவ வல்லுநர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே தான் தமிழக அரசால் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக செயல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி தமிழக அரசால் பல்வேறு வழிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மாபெரும் கொரோனா விழிப்புணர்வு முகாம் இன்று (ஆக.1) முதல் ஆக.7 வரை ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும் நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பொதுமக்களும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்கும் விதமாக பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறும்படம் எடுக்கும் போட்டியும், விழிப்புணர்வு மீம்ஸ் எழுதும் போட்டியும் நடத்தி சிறந்த படைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால் நற்சான்றுகளும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

எனவே ஆர்வமுள்ள பொதுமக்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை உருவாக்கி அதனை நாளை மறுநாளுக்குள் (ஆக.3) ddhspdkcovid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 9345333899 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது நேரடியாக புதுக்கோட்டை துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், 6, சாந்தநாதபுரம் 6ம் வீதி, புதுக்கோட்டை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இந்நிகழ்வின் இன்னும் ஒரு பகுதியாக 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை பாராட்டி மாவட்ட நிர்வாகத்தினால் நற்சான்றுகளும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதியில் உள்ள தகுதி வாய்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு 100 சதவீத இலக்கை அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.