
புதுக்கோட்டை, இராணிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ரூ. 7.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று கிடங்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர், ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம், மதுரை திருமங்கலம் கப்பலூர் சிப்காட் தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் தலா 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 புதிய சேமிப்பு கிடங்கு ரூ.7 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்டு இருந்தது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், பல்லடம் மற்றும் குனிச்சி ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்படவுள்ள இரண்டு சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நிறுவன தலைவர் ப.ரங்கநாதன் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.