புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் புதுக்கோட்டை சங்க தலைவர் துரை மணி தலைமை தாங்கினார். தங்கம்மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்எஸ் காசிநாதன் அனைவரையும்  வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  நகராட்சி ஆணையர்  நாகராஜன் அவருடைய பள்ளி பருவ ஆசிரியர்  சியாமளா பத்மநாபன் உள்ளிட்ட பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், புலவர் சந்திரசேகரன், பார்வதி, ராம்தாஸ், அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, பரமசிவம் ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருதினையும் நற்சான்றிதழையும் வழங்கி பேசினார்.

மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜ்மோகன் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் சுசரிதா, எம்எஸ்.ரவி, எம்.கருப்பையா, பழனிச்சாமி, கவிதாகருணாகரன், ஆர்எஸ்.காசிநாதன்,  எம்.செல்வமணி, எம்.மாரியப்பன், எஸ்.பன்னீர்செல்வம், முருகையன், பாமாலினி ராஜேந்திரன், பத்மலதா, கலைச்செல்வி, செல்வி துரைமணி உட்பட 25 ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் விருதுகளும் சான்றிதழும் வழங்கி வாழ்த்தி பேசினார்.

விழாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் தங்கம் மூர்த்தி விருது பெற்ற அனைவரையும் பாராட்டி வாழ்த்தி பேசினார். அவர் பேசுகையில், ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாள் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5ம் நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் தினத்தை வரவேற்போம் என்று கூறினார்.

இவ்விழாவில் துணை ஆளுநர் கருணாகரன், வக்கீல் செந்தில், வெங்கிடசுப்பிரமணியன், ராமதாஸ், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். நிறைவாக ரோட்டரி சங்க செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.