புதுக்கோட்டை பெரியார் நகரில் அடுத்தடுத்த வீடுகளில் பாம்புகள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் நகரை தூய்மையாக வைத்திருக்க நகராட்சிக்கு வேண்டுகோள்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள் அதற்கேற்றார்போல் அடுத்தடுத்த வீடுகளில் பாம்புகள் படையெடுத்து புகுவதால் ஒரு குடியிருப்பு பகுதியே செய்வதறியாது தவித்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா நம்பி தான் ஆக வேண்டும் ஆம்.புதுக்கோட்டையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கொம்பேறிமூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாகப் பிடித்து காப்பு காட்டில் விட்டனர். அவர்கள் பிடித்து காப்பு காட்டில் விட்டது ஒரு பாம்பு மட்டுமே இன்று ஒரு நாள் மட்டும் 3 பாம்புகள் அடுத்தடுத்த வீடுகளில் புகுந்ததால் நிலைகுலைந்து போயுள்ளனர் அப்பகுதி பொதுமக்கள்.

புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் உள்ள மரத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று சுற்றித்திரிந்ததால் அச்சமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் தாவி திரிந்த அந்த பாம்பை லாவகமாக பிடித்து நார்த்தாமலை காப்புக் காட்டில் கொண்டு போய் விட்டனர்.தொடர்ந்து பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுவதாகவும் இதற்கு காரணம் அருகே உள்ள காட்டுப் புது குளத்தில் அடர்ந்துள்ள முட்புதர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான காலிமனையில் உள்ள முட்புதர்கள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் சூழ்ந்துள்ள முட்புதர்களை அப்புறப்படுத்தாமல் உள்ளதால் அதில் இருந்து அதிகப்படியான பாம்புகள் நாள் தோறும் வெளியே வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெரியார் நகர் பகுதியில் சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீரில் அடித்து வரும் பாம்புகள்

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மச்சுவாடி உள்ளிட்ட காட்டு பகுதியில் இருந்து வெளியேரும் தண்ணீரில் அடித்து வரப்படும் பாம்புகள் மழைநீர் செல்லும் முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய பெரியார் நகர், கம்பன் நகர், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் ஒய்யாரமாக சென்று விடுகின்றது. இப்பகுதியில் பாம்பு கடித்து இதுவரை யாரும் பலியாகவில்லை என்று சொல்லி வந்தாலும் இனிமேல் நடந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது ஏனென்றால் கடந்த 10 நாளில் மட்டும் பல்வேறு வீடுகள் சாலைகளில் ஏராளமான பாம்புகள் தென்பட்டுள்ளன சில பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன சில பாம்புகள் கொல்லப்பட்டுள்ளனர் இவை அனைத்திற்கும் முக்கியஅங்கமாக இருக்கிறது காட்டுப் புதுக்குளம் தான்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு பின்புறம் இருக்கக்கூடிய கட்டுப்புதுக்குளம் உள்ளேயும் வெளியேயும் தான் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம், போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் அரசு விடுதிகள், மாவட்ட விளையாட்டு மைதானம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் அலுவலகம் புதுகை வரலாறு நாளிதழின் அலுவலகம்,அதன் அருகிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரின் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு சார்ந்த அலுவலகங்கள் அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு மைதானத்தை சுற்றியும் விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். பெரியார் நகர், கம்பன் நகர் பேருந்து நிலையம் சாலைகளில் பல நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இப்படி இருக்கையில் சாலையில் உலா வரும் பாம்புகளால் யாருக்கும் எப்போதும் என்னவேண்டும் என்றாலும் நடக்கலாம்  அசம்பாவிதங்கள் பெரிதாக நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக குப்பை கூளங்கள் புதர்களையும் அகற்றிவிட வேண்டும் என்பது புதுகை வரலாறின் எதிர்பார்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 − 24 =