புதுக்கோட்டை நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில், மழைக்காலத்தையொட்டி வரத்துவாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளையும் மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனிற்காக எண்ணற்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி இன்றையதினம் புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில், மழைக்காலத்தையொட்டி புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில், சாந்தனாதபுரம் 5ஆம் வீதி, ஜீவாநகர், புதுநகர், காமராஜபுரம் 12ஆம் வீதி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மழைக்காலத்திற்கு முன்னதாகவே வரத்துவாய்க்கால்கள் தூர்வாருவதன் மூலம் மழைக்காலங்களில் வரும் அதிகப்படியான மழைநீர் தேங்காமல் சீராக செல்வதற்கு வழிவகை ஏற்படும். மேலும் வரத்துவாய்க்கால்களில் அடைப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன், அதிகப்படியான உபரிநீர்கள் அனைத்தும் வெளியேறும்.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வாகவாசல் ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.63.79 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் 1.450 கிலோ மீட்டர் நீளமுடைய  வாகவாசல் – கேடயப்பட்டி சாலைப் பணியினையும் மற்றும் இராஜாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டிலான  2 வகுப்பறையுடன் கூடிய பள்ளிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எனவே தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என்றார். இந்த ஆய்வுகளின்போது, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஷியாமளா, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு, ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளர் சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.