புதுக்கோட்டை கவிராசன் அறக்கட்டளையின் சார்பில் “நட்சத்திர ஆசிரியர்” விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன – முருகபாரதி தகவல்

புதுக்கோட்டை கவிராசன் அறக்கட்டளையின் சார்பில் “நட்சத்திர ஆசிரியர்” விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக கவிராசன் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் முருகபாரதி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கவிராசன் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் முருகபாரதி கூறியுள்ளதாவது:- புதுக்கோட்டையின் கவிராசன் அறக்கட்டளை, புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும், அரசு விருது பெறாத, சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 15 ஆண்டுகளாக, “நட்சத்திர ஆசிரியர்” விருது வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் இவ்வாண்டும், வரும் செப்டம்பர் 5ம் தேதி, ஆசிரியர் தினத்தில், 5 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்க உள்ளது. இதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பயிற்சி நிறுவனம் என ஏதோ ஒன்றில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியப் பணியை ஆற்றி வருபவராக இருக்க வேண்டும். இதுவரை, இந்திய அல்லது தமிழ்நாடு அரசின் விருது பெறாதவர்களாக இருக்க வேண்டும். தங்கள் கடமையில் தவறாதவர்களாக இருக்க வேண்டும். சுய ஒழுக்கம் காப்பவராக, சர்ச்சைகளில் சிக்காதவராக இருக்க வேண்டும். வழக்கமான பணியோடு, கூடுதலான சிறப்புப் பணிகளை ஆற்றி இருக்க வேண்டும்.

பரிந்துரை செய்யப்படுபவரின் பணிகள் மற்றும் பண்புகள் குறித்து, பரிந்துரை செய்பவருக்கு நேரடியாகத் தெரிந்திருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட யாரும் பரிந்துரை செய்யலாம். சுய பரிந்துரைகள் ஏற்கப்படாது.

மேலும் பரிந்துரைகளை, ஆசிரியரின் பெயர், தற்போது பணியாற்றும் பள்ளி / கல்லூரி, ஊர் மற்றும் கைப்பேசி எண் ஆகிய விவரங்களோடு, 80565 22115 என்ற எண்ணிற்கு, வரும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள், வாட்சப் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.