புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் உலக தாய்மொழி தினவிழா இன்று கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் புதுக்கோட்டை மா. மன்னர் கல்லூரி மேனாள் வரலாற்றுத் துறைத்தலைவரும், வாசகர் பேரவைச் செயலருமான பேரா.சா.விஸ்வநாதன் மற்றும் தமிழ்துறை கெளரவ விரிவுரையாளர் முனைவர் போ.புவனேஸ்வரி இருவரும் சிறப்புரையாற்றினர்.

பேரா.சா.விஸ்வநாதன் தனது உரையில் “உலக தாய்மொழி தினம் உருவாகக் காரணமாக இருந்தது 5 மாணவர்களின் உயிர்த்தியாகம். 1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படைக் காரணம் சமயம். கிழக்கு பாகிஸ்தான், மேற்குபாகிஸ்தான் இரு பகுதிகளிலும் வாழ்ந்த வர்கள் சமய அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் மொழி, கலாச்சாரம், பண்பாடு என்ற அடிப்படையில் வேறுவேறானவர்கள். 1948 ஆம் ஆண்டு உருது மொழியை இரண்டு பகுதிளுக்கும் ஆட்சிமொழியாகக் கொண்டு வந்தார்கள். அதனைத் தொடர்ந்து வங்கமொழியையும் ஆட்சிமொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கிழக்கு பாகிஸ்தானில் போராட்டங்கள் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் போராட்டம் நடத்திய டாக்கா பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 5 மாணவர்கள் உயிர்நீத்தனர். சமயம் ஒன்றாக இருந்தாலும், மொழி என்று வரும்போது அதைவிட்டுத்தராத மொழிப்பற்றை இந்த சம்பவம் உலகிற்கு பறைசாற்றுகிறது. இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில், வங்கதேசத்தின் வேண்டுகோளை 1990 ஆம் ஆண்டு ஏற்ற ஐக்கிய நாடுகள் நிறுவனம், 2000 மாவது ஆண்டு முதல் இந்த நாளை உலக தாய்மொழி தினமாக கொண்டாடி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழி பற்று வைக்க வேண்டும். அது பண்பாடு கலாச்சாரத்தின் மீதான பற்றை உருவாக்கும். இறுதியில் தேசப்பற்றாக மாறும். யுனெஸ்கோ அடுத்த 50 ஆண்டுகளில் அழியும் மொழியாக தமிழையும் பட்டியலிடுகிறது. அது நேராமலிருக்க, உங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தமிழை நேசிக்க வேண்டும். அதற்கு நிறைய தமிழ் நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய புதிய வார்த்தைகளை கற்க தினந்தோறும் செய்தித் தாள்களை வாசியுங்கள், மொழி ஆற்றல் வளரும். மொழி ஆற்றல் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தரும்” என்று குறிப்பிட்டார்.

உடன் சிறப்புரையாற்றிய பேரா.போ.புவனேஸ்வரி, தமிழ் மொழியின் தொன்மையையும், அழகையும், பிறமொழிகளை விட தமிழில் உள்ள உன்னதமான சிறப்புகளையும் எடுத்துக்கூறினார். முதலாமாண்டு முதுகலை தமிழ் மாணவி சுபலெட்சுமி, மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி பபிதா, இரண்டாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி ஜெயலட்சுமி ஆகியோரும் தமிழ்மொழியின் சிறப்புகளையும் , பெருமைகளையும் எடுத்துரைத்தனர். புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் இந்து தமிழ்திசையின், உலக தாய்மொழி தின சிறப்பிதழ் “களஞ்சியம் ” “தினமணியின் 85வது ஆண்டு சிறப்பு மலர்”, “கலாமின் எழுச்சியுரைகள்” நூலும் மாணவிகளுக்கு வாசிக்க அன்பளிப்பாக வழங்கப்பட்டது. முன்னதாக தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் மா.சாந்தி வரவேற்புரையாற்றினார். நிறைவாக தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் க.யோகாம்பாள் நன்றி கூறினார்.விழாவில் ஏராளமான பேராசிரியர்களும், மாணவிகளும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

57 − 50 =