புதுக்கோட்டை அருகே காரில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த ஒரு கிராம நிர்வாக அலுவலர் உட்பட மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஜெயரவி வர்மா என்பவர் கோவிலூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் அமைக்கப்பட்ட உதவிக் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கிராம நிர்வாக அலுவலர் ஜெயரவி வர்மாவின் கார் அந்த வழியாக வந்துள்ளது.அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய போது அதில் இருந்த விஏஓ ஜெயம் ரவி வர்மா உள்ளிட்ட மூவர் முன்னுக்கு பின்னான பதிலை கூறியதையடுத்து அந்த காரை போலீசார் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது அந்த காருக்குள் ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயரவி வர்மா மற்றும் அவருக்கு உதவியாளராக செயல்பட்ட ஆத்தங்குடியைச் சேர்ந்த கணேசன் அதேபோல் மதுரையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கொடுக்கும் வேளையில் ஈடுபட்ட காரைக்குடியை சேர்ந்த சூர்யா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா பொட்டலங்கள் 3 செல்போன்கள் ஒரு கார் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அரசு ஊழியரான கிராம நிர்வாக அலுவலர் கஞ்சா கடத்தி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.