புதுக்கோட்டை,அரசு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வாசகர் பேரவை இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தினவிழா பள்ளியில் இன்றூ நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பி.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். மேனாள் மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவரும்,வாசகர் பேரவை செயலருமான சா.விஸ்வநாதன் தனது அறிமுகவுரையில், 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி சர்.சி.வி. ராமனும் அவருடைய மாணவர் கே.எஸ்.கிருஷ்ணனும், பின்னாளில் “இராமன் விளைவு” என்று அறியப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்த்திய நாளை நாம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்தியாவிற்கு முதல் நோபல் பரிசை பெற்றுத்தந்த பெருமை தமிழகத்தைச் சாரும். அறிவியல் எல்லோருடைய வாழ்க்கையிலும் இரண்டரக்கலந்திருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிவதோடு மட்டுமல்ல, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்ற ஆற்றலையும் ஒவ்வொரு மாணவரும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். சர்.சி.வி.ராமன் எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர். இந்தியாவில் அன்னியர் ஆதிக்கத்தில், எந்த வசதியும் வாய்ப்பும் இல்லாத காலத்தில் கிடைத்ததைக் கொண்டு ஆய்வு நடத்தி நோபல் பரிசு பெற்று சாதனை படைத்தவர் சர்.சி.வி.ராமன். நோபல் பரிசை வாங்கியபின் அவர் சொன்னார், “ஒரு சுதந்திர மனிதனாக இருந்து இந்த பரிசை வாங்கியிருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைத்திருப்பேன்”என்று. அவருக்குப் பின் இன்றுவரை இந்திய மண்னில் ஆய்வு நடத்தி நோபல் பரிசை யாரும் பெறவில்லை. இன்று நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உங்களை நல்ல அறிவியல் ஆய்வாளர்களாக உயர்த்திக்கொள்ளுங்கள் என்று மாணவர்களைக் கேட்டுகொண்டார். மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் ம.வீரமுத்து அறிவியல் அறிவின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

விழாவில் மாணவ மாணவிகளுக்கு வாசகர் பேரவை சார்பில் “இந்து தமிழ் திசை” தேசிய அறிவியல் தின சிறப்பு இணைப்பு”களஞ்சியம்” மற்றும் அப்துல்கலாமின் எழுச்சியுரைகள் நூல்களும் வழங்கப்பட்டது. முன்னதாக துணை முதல்வர் ஜி.செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக துணை முதல்வர் (இடைநிலை) இன்பராஜ் நன்றி கூறினார். இறுதியாக மாணவ மாணவிகள் அப்துல்கலாமின் மாணவர்களுக்கான 10 உறுதிமொழிகளையும், அறிவியல் தின உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டனர்.