புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கழிவுகளை சுத்திகரிக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை – சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கழிவுகளை சுத்திகரிக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் நிர்வாகத் திறனில் சிறந்து விளங்குகிறார். இதனால் கோவிட் இரண்டாம் அலையை விரைவாக கட்டுப்படுத்தி உள்ளார்.

இதேபோன்று கோவிட் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே அதிகளவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் ஒருமணி நேரத்திற்கு 200 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பயன்பெறும் வகையில் செல்போன் டவரும் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை கழிவுகளை சுத்திகரிக்கும் வகையில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனை பகுதியில் 5,000 மரக்கன்றுகள் நட்டு குறுங்காடுகள் உருவாக்கி அதனை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.