புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் புதிய கற்கால கைக்கோடாரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல்

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் புதிய கற்கால கைக்கோடாரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் டி.பக்கிரிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் செப்டம்பர் 2021 மாதத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாதாந்திர சிறப்பு அரும்பொருள் (புதிய கற்கால கைக்கோடரி) பற்றிய குறிப்புகள்.

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் செப்டம்பர், 2021 மாதத்தில் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு மாதாந்திர சிறப்பு அரும்பொருள் ஒன்று (புதிய கற்கால கைக்கோடரி) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நவீன கற்காலம், புதிய கற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்களின் கலாச்சார பரிணாம வளர்ச்சியின் இறுதி கட்டம். இக்காலக் கற்கருவிகள் மெருகூட்டல் அல்லது அரைத்தல், வளர்க்கப்பட்ட தாவரங்கள் அல்லது விலங்குகளைச் சார்ந்திருத்தல், நிரந்தர கிராமங்களில் குடியேறுதல், மட்பாண்டங்கள் மற்றும் நெசவு போன்ற கைவினைகளின் தோற்றம் ஆகியவற்றால் அறியப்படுகிறது.

புதிய கற்காலத்தின் காலம் சுமார் 10,000 ஆண்டுகள். இந்த காலகட்டத்தில் அந்த மக்கள் விவசாயம், கால்நடைகளை வளர்ப்பது போன்ற தொழில்களை அறிந்துள்ளார்கள். வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் உணவு சேகரித்தல் ஆகியவற்றை சார்ந்து இல்லை. அவர்கள் உணவை உற்பத்தி செய்தனர்.

இங்கு காட்சிக்குவைக்கப்பட்டுள்ள இந்த புதிய கற்காலக் கைக்கோடாரி சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மங்களநாடு வடக்கு கிராமத்தில் கிடைத்தது. இவ்வரிய அரும்பொருளை அனைவரும் தற்போது செப்டம்பர் 2021 வரை புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம். அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை. மேலும் ஒவ்வொரு வெள்ளி, மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் அருங்காட்சியகம் விடுமுறை என தெரிவித்துள்ளார்.