புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற, சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா வழங்கினார்.

இம்முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தி உள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 2  சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்றையதினம் நடத்தப்பட்டது.  இம்முகாமில் 128-க்கும் மேற்பட்ட வேலையளிப்போர் கலந்துகொண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கடந்த  2021-2022 மற்றும் 2022-2023 ஆண்டுகளில் இதுவரை மகளிர் திட்டம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் 23 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 3,690 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) தேவேந்திரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொது) மணிகண்டன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) வேல்முருகன், கல்லூரி முதல்வர் சுகந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்) இராமர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.