புதுக்கோட்டையில் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின்கீழ் 8,746 பேருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தகவல்

புதுக்கோட்டையில் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின்கீழ் 8,746 பேருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்ததாவது:- ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் 05.08.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் ஒன்றியத்தில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதியால் திருமயம் வட்டம், வி.கோட்டையூரிலும், திருவரங்குளம் ஒன்றியம், கொத்தமங்கலம் கிராமத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரால் ‘மக்களைத் தேடி மருத்துவம்” என்ற சிறப்பான திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டு, பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்து மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுவதை பார்வையிட்டனர்.

மேலும் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் நீரிழிவு மற்றும் இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி), டயாலிசிஸ் சிறுநீர் கலவைப் பிரிப்பிற்கு தேவையான திரவ விநியோகம், மகப்பேறு பராமரிப்பு, குழந்தை தடுப்பூசி போன்ற அத்தியாவசிய சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், துணை சுகாதார நிலையத்தை அடிப்படை அலகாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுகிறது. துணை சுகாதார அளவில் ஒரு மகளிர் தன்னார்வலர், வட்டார அளவில் ஒரு செவிலியர், ஒரு இயன்முறை மருத்துவர் ஆகியோரைக் கொண்டு இத்திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் திருமயம் வட்டாரத்தில் 2,666 நபர்களும், திருவரங்குளம் வட்டாரத்தில் 5,536 நபர்களும், இயன்முறை சிகிச்சை திருமயம் வட்டாரத்தில் 120 நபர்களும், திருவரங்குளம் வட்டாரத்தில் 136 நபர்களும், நோய் ஆதரவு சிகிச்சை திருமயம் வட்டாரத்தில் 120 நபர்களும், திருவரங்குளம் வட்டாரத்தில் 168 நபர்களும் என மொத்தம் திருமயம் வட்டாரத்தில் 2,906 நபர்களும், திருவரங்குளம் வட்டாரத்தில் 5,840 நபர்களும் ஆக மொத்தம் 8,746 நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மாள் என்பவரும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் (தெற்கு) ஊராட்சி, கூழாச்சிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவரும் மிகுந்த பயனளிக்கும் இத்திட்டத்தை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.