புதுக்கோட்டை மேலராஜ வீதியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ நைனா ராஜு தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில் சத்யசாய் புட்டபர்த்தி பாபாவின் ஐம்பொன் விக்ரகம் பிரதிஷ்டை செய்வதற்காக சுவாமி மலையில் தயாராகி புதுக்கோட்டைக்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து நகரில் புதுக்கோட்டை வடக்கு மூன்றாவது வீதியில் சத்சங்கம் இல்லத்தில் (உதயம் டிராவல்ஸ் பாபு) வைக்கப்பட்டு சாய்பாபா பக்தர்களால் அஷ்டோத்திரம் பஜனை மற்றும் ஸ்ரீ சத்யசாய் மெயின் சமிதியின் உறுப்பினர்கள் பங்கேற்று சாய்ராம் நாமம் சொல்லி தங்கள் கரங்களால் மலர்தூவி அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. வழிபாடு பூஜையில் தபால் துறையில் இருந்து ஓய்வு பெற்ற கண்ணன் சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், உலக வாழ்க்கைப் பந்தங்களிலிருந்து விடுபட்டு இறைவனை நாடும் வழிமுறையை எளிமையாகச் சொன்னதுடன் தன் அற்புதச் செயல்களின் மூலம் தனக்கென தனி பக்தர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் சீரடி சாய்பாபா. சீரடியில் இன்னும் பக்தர்கள் கூட்டம் அருளாசி வேண்டி அலை மோதிக் கொண்டுதான் இருக்கிறது. சாய்பாபாவை அற்புத மகானாகப் போற்றுகின்றனர். சத்யசாய் புட்டபர்த்தி பாபாவின் ஐம்பொன் விக்ரகம் ஸ்ரீநைனா ராஜு தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில் அமைந்த்து மிகுந்த பெருமைக்குரியதாகும் என்றும் கூறினார். நிகழ்வில் உதயம் டிராவல்ஸ் பாபு, ராஜகோபாலபுரம் இறைப்பணியாளர் பெல் மற்றும் பாபாவின் அருட் தொண்டர்கள் மணிகண்டன், சேகர், ராஜா உள்ளிட்ட சாய்பாபா பக்தர்கள் கலந்து கொண்டனர். வழிபாடு பூஜைக்கான ஏற்பாடுகளை சத்சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.