புதுக்கோட்டையில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த பெண் போலீசில் ஒப்படைப்பு

புதுக்கோட்டையில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த பெண் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த விமலா என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் அயனாவரம் பகுதியில் குடியிருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் புதுக்கோட்டையில் பல பகுதிகளில் உள்ள பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி என்னிடம் பணம் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும், பணம் தேவைபடுவோருக்கு கடன் பெற்று தருவதாகவும் கூறி 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளார். மேலும் சிலரிடம் இருந்து நகைகளையும் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அவரிடம் பணம் கொடுத்தவர்களுக்கு பணத்தையும் திருப்பி தராமலும், கடன் வாங்கி தருமாறு கேட்டவர்களுக்கு கடனும் பெற்றுத்தரவில்லை என தெரிகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அப்பெண்ணிடம் பணத்தை திருப்பி கேட்டபோது தருகிறேன் என்று கூறி வந்ததோடு ஒரு காலகட்டத்தில் தலைமறைவாகிவிட்டாதாகவும், அதனைத்தொடர்ந்து நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டிற்கு விமலா வந்ததை அறிந்த பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் தங்கியிருந்த வீட்டை சூழ்ந்து அவரை பிடித்து கணேஷ் நகர் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் விசாரித்த கணேஷ் நகர் போலீசார் இந்த வழக்கு மோசடி வழக்கு இருப்பதால் மாவட்ட குற்றப்பிரிவு வழக்காக மாற்றி குற்றம் சாட்டப்பட்ட விமலாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் தற்போது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் பணம் இரட்டிப்பு மற்றும் கடன் பெற்று தருவதாக கூறி ஒரு பெண் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.