
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய கோவிட்-19 முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மாணவர்களின் வகுப்பறை, மின்விளக்கு வசதி, குடிநீர்வசதி, கழிவறை வசதி போன்ற பல்வேறு வசதிகள் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிதல், இடைவெளிவிட்டு அமர்தல், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தவறாது கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்றவை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பள்ளிகளில் தவறாது கோவிட் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் கே.எஸ்.ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.